சனி, 30 ஜூன், 2012


யூரோ கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் சில அரிய தகவல்கள்
யூரோ கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்று நாளை நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்ற யூரோ கிண்ண போட்டியின் சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
யூரோ கிண்ண போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஹென்றி டுயூலானி கிண்ணம் வழங்கப்படும். இவர்தான் 'யூபா'வை தோற்றுவித்து அதன் முதல் செயலாளராக இருந்து யூரோ கிண்ண கால்பந்து போட்டி நடைபெற முக்கிய காரணமாக இருந்தவர்.
யூரோ கிண்ண போட்டியில் இதுவரை எந்த அணியும் தொடர்ச்சியாக இரு முறை கிண்ணத்தை வென்றது இல்லை. நடப்பு சாம்பியனான ஸ்பெயின் இந்த முறை கிண்ணத்தை வென்றால் இதுவும் ஒரு சாதனைதான்.

1960ம் ஆண்டு சாம்பியன் சோவியத் யூனியன் 1964ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் தோல்வியுற்றது. 1972ம் ஆண்டு சாம்பியன் மேற்கு ஜெர்மனி 1976ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் செக்கஸ்லோவாகியாவிடம் தோல்வியுற்றது.
இகெர் கேசிலாஸ்,செர்ஜியோ ரமோஸ்,ஆன்ட்ரஸ் இனியஸ்டா,சேவி ஹெர்னான்டஸ்,பெப்ரிகாஸ்,டேவிட் சில்வா,பெர்னான்டோ டார்ரஸ்,சேபி அலான்சோ ஆகியோர் கடந்த 2008ம் ஆண்டு கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணியில் இடம் பிடித்திருந்தனர்.
இந்த யூரோவில் ஸ்பெயின் அணி கிண்ணத்தை வென்றால் தொடர்ச்சியாக இருமுறை கிண்ணத்தை வென்ற பெருமையை மேற்கண்ட வீரர்கள் பெறுவர். இதற்கு முன் மேற்கு ஜேர்மனியின் ரைனர் போக்ஹாப் 1972,80 போட்டிகளில் இரு முறை கிண்ணத்தை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தார்.
ஆனால் தொடர்ச்சியாக இருமுறை வென்றது இல்லை. இதற்கு முன் 13 வீரர்கள் இரு முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளனர்.
இதற்கு முன்பு ஜேர்மனி 1972ம் ஆண்டு யூரோ கிண்ணத்தையும், 1974ம் ஆண்டு உலக கிண்ணத்தையும் வென்றுள்ளது. பின்னர் 1998ல் உலக கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் 2000ம் ஆண்டில் ஐரோப்பிய கிண்ணத்தை கைப்பற்றியது.
தொடர்ந்து 2008ல் ஸ்பெயின் ஐரோப்பிய கிண்ணத்தை வென்றது. பின்னர் 2010ல் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. தொடர்ச்சியாக மூன்று முறை யூரோ கிண்ணம், உலகக் கிண்ணம் என்று எந்த அணியும் வென்றது இல்லை.
யூரோவில் இதற்கு முன் 5 இறுதி ஆட்டங்களில் வெற்றி தோல்வி கூடுதல் நேரத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த யூரோ கிண்ண இறுதி ஆட்டத்தில் ஒரே ஒரு முறைதான் டைபிரேக்கர் முறையில் சாம்பியன் அணி தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1976ம் ஆண்டு மேற்கு ஜெர்மனி-செக்கோஸ்லோவாகியா அணிகள் மோதிய இறுதி ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
பின்னர் டைபிரேக்கரில் 5-3 என்ற கோல் கணக்கில் செக்கோஸ்லோவாகியா கிண்ணத்தை வென்றது.
1960ம் ஆண்டு கிண்ணம் தொடங்கியது முதல், இறுதிப் போட்டியில் பெரும்பாலும் ஒரு கோல் வித்தியாசத்தில்தான் 7 அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. சமீபத்தில் 2004ல் கிரீஸ் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுல் அணியையும், 2008ம் ஆண்டு ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி அணியையும் வீழ்த்தின.
டென்மார்க் (1992), நெதர்லாந்து (1988), பிரான்ஸ் (1984), இத்தாலி (1968) ஆகிய அணிகள் இரு கோல்கள் வித்தியாத்தில் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.1972ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜேர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் சோவியத் யூனியன் அணியை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.
இறுதிப் போட்டியில் மூன்று கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே அணி ஜேர்மனிதான். ஒரே பிரிவை சேர்ந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இது 4வது முறை ஆகும்.
இதற்கு முன்பு 1988ல் நெதர்லாந்து-ரஷ்யா, 1996ல் மேற்கு ஜேர்மனி- செக்குடியரசு, 2004ல் கிரீஸ்-போர்ச்சுகல் அணிகள் ஒரே பிரிவிலிருந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.
யூரோ கிண்ண இறுதி ஆட்டத்தில் இதுவரை 36 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 14 முதல் பாதியிலும் 19 இரண்டாவது பாதியிலும் 3 கோல்கள் கூடுதல் நேரத்திலும் அடிக்கப்பட்டுள்ளன.
இறுதி ஆட்டத்தில் அதிவேக கோல் அடித்த பெருமைக்குரியவர் ஸ்பெயின் வீரர் ஜீசஸ் பரேடா ஆவார்.
1964ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் சோவியத் யூனியனுக்கெதிராக ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் இவர் கோல் அடித்து அசத்தினார். அடுத்த 2வது நிமிடத்தில் சோவியத் யூனியன் வீரர் கல்ம்ஷியான் குஷேனோவ் பதில் கோல் திருப்பினார். யூரோ வரலாற்றில் அதிகவேகமாக அடிக்கப்பட்ட 2வது கோல் இது.
யூரோ கிண்ண இறுதி ஆட்டத்தில் கோல்கீப்பர்கள் அணித்தலைவராக இருக்கும் அணிகள் மோதும் முதல் இறுதி ஆட்டம் இது. ஜியான்லுகி பப்பன் (இத்தாலி), இகெர் கேசிலாஸ் (ஸ்பெயின்) அணித்தலைவராக இருக்கின்றனர்.
1934ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஜியான்பியாரோ காம்பி (இத்தாலி), பிளானிகா (செக்கோஸ்லோவாகியா) தங்கள் அணிகளுக்கு அணித்தலைவர்களாக இருந்துள்ளனர்.
கீவ் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி கிண்ணத்தை கைப்பற்றினால் அந்த அணியின் பயிற்சியாளர் வின்சென்ட் டெல்போஸ்க் யூரோ கிண்ணம், உலகக் கிண்ணம் மீண்டும் யூரோ கிண்ணம் வென்ற அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் என்ற பெருமையை பெறும் முதல் பயிற்சியாளர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக