ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

இலங்கையின் வசமானது ரி - 20 உலகக் கிண்ணம்
ரி - 20 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, இலங்கை அணி ரி - 20 உலகக் கிண்ணத்தை 18 ஆண்டுகளின் பின்னர் சுவீகரித்துள்ளது.
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தெடுப்பாட்டத்தை தீர்மானிக்க, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில்  4 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.
 
131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 17.5 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
 
இலங்கை அணியின் சார்பில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெரேரா 5, டில்சான் 18 ஓட்டங்களுடனும் அடுத்து களமிறங்கிய மஹேல ஜெயவர்த்ன 24, திரிமன்னே 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சங்கக்கார 52 அதிக ஓட்டங்களையும் திசேர பெரேரா 23 ஓட்டங்களையும் பெற்றனர். 
 
இந்திய அணி சார்பில் பந்து வீசிய மோகிர், ரெயினா, அஸ்வின், மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைப் பெற்றனர்.
 
இன்றைய இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனான சங்கக்கார தெரிவானதுடன் ரி -20 தொடரின் போட்டி நாயகனாக விராட் கோஹ்லி தெரிவானார்.
 
இன்றைய போட்டியில் பெற்றுக் கொண்ட ஓட்டங்களுடன் மஹேல ரி - 20 உலக கிண்ணப் போட்டியில் 1000 ஓட்டங்கள் என்ற அதி கூடிய ஓட்டங்களை கடந்த வீரராக சாதனை படைத்துள்ளார். இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான மஹேல, சங்கக்கார இன்றைய போட்டியுடன்  ரி -20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளனர்.
 
இதேவேளை, இந்திய அணி சார்பில் முதலாவது துடுப்பாட்ட வீரராகளாக களமிறங்கிய ரகானே 3 ஓட்டங்களும் றோகித் 29 ஓடடங்களையும் பெற அடுத்து களமிறங்கிய யுவராஜ் 11, விராட் கோஹ்லி 77 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் டோணி 4  ஓட்டங்களையும் பெற்றனர்.
 
இதில் இலங்கை அணி சார்பில் பந்து வீசிய குலசேகரா, மத்தீயுஸ், ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக் கொண்டனர். 
 
அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் வெற்றி பெற்று இலங்கை அணியும் தென்னாபிரிக்க அணியுடன் வெற்றி பெற்று இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற ரி -20 உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றி கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக